தமிழக - ஈழ உறவை சிதைப்பதற்காக யாரோ திட்டமிடுகிறார்கள்!

தமிழக - ஈழ உறவை சிதைப்பதற்காக யாரோ திட்டமிடுகிறார்கள்!
Published on

இலங்கையில் வடக்குமாகாணசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலின் மூலம் பெரும்பாலான வாக்குகள் பெற்று, ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைச்சர்கள், தமிழ் மக்களின் வாழ்வாதாரமான- அன்றாடப் பிரச்னைகளில் கவனம் செலுத்திவருகின்றனர். தமிழகத்தை ஒட்டிய ஈழத்தின் கடற்பரப்பில், இரு கரையில் உள்ள தமிழர்களுக்கும் இடையிலான பிரச்னையாக, மீன்பிடிப் பிரச்னை உருவெடுத்துள்ளது. இது பற்றி, இலங்கை வடக்கு மாகாண சபையின் கடல் தொழில் மற்றும் நன்னீர் மீன்வளத்துறை அமைச்சர் டெனிஸுடன் பேசினோம்:

தமிழக - ஈழ மீனவர் பிரச்சினையின் உண்மையான நிலைதான் என்ன?

தமிழக மீனவர்களின் வருகையால் ஈழ மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ளப்படவேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.  தமிழகக் கரைகளில் மட்டும் கிட்டத் தட்ட 5000 பொட்டம் ரோலர்ஸ்(அடியோடு அள்ளும் இழுவைப் படகுகள்) காணப்படுகின்றன. அவை வாரம் ஒன்றுக்கு மூன்று தடவைகள் கடலுக்கு வருகின்றன. இந்த மீன்பிடி முறை இந்திய சட்டங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த முறையானது, இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஒரு தொழில் முறையாகும். ஈழ கடற் பரப்புக்குள் நுழையும் தமிழக மீனவர் ஒரு கிலோ இறாலைப் பிடிப்பதற்காக, 15 கிலோ அளவிலான ஏனைய மீன் மற்றும் சிறு கடல்வாழ் உயிரிகளை நாசமாக்கிவிடுகின்றனர். இந்த அழிப்பு தொடருமானால், எதிர்காலத்தில் கடலில் மீன்களின் உற்பத்தி குறைந்துவிடும். எமது பிள்ளைகள் கடல் வளத்தை அனுபவிக்க முடியாத சூழல் உருவாகும்.  நானும், விக்கினேஸ்வரன் அவர்களும், ஏனைய அமைச்சர்களும் தமிழக கடற்கரை மாவட்டங்களில் உள்ள நாகப்பட்டினம், இராமேஸ்வரம், தனுஷ்கோடி  ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்து, தமிழக மீனவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி, தீர்வு காணவுள்ளோம். உறவு அடிப்படையில் தீர்க்க முயற்சிக்கிறோம்.

2009-க்கு முன் ஈழ கடல் வள சுரண்டல் பற்றிய செய்திகள் வெளிவரவில்லையே?

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்கள் எதுவும் வாய்திறந்து கதைக்க முடியாமல் இருந்தனர். குறித்த ஆண்டில் நிகழ்ந்த ஆயுதப் போராட்ட ஓய்வோடு, சில சில விடயங்களில் எமது மக்கள் நேரடியாக கதைக்கக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

நான் வடக்கு மாகாண சபையின் அமைச்சராக இருந்தாலும் எனக்கு போதியளவு அதிகாரமில்லை. கடல் நீர் மீன் பிடி தொடர்பிலான அதிகாரம் மத்திய அரசிடமே உண்டு. நான் இது தொடர்பில் மத்திய அரசிடம் பேச இருக்கிறேன். இலங்கை, இந்திய மீனவர்களின் கூட்டு கண்காணிப்பின் ஊடாக இருநாட்டு மீனவர்களின் எல்லை மீறலையும் கட்டுப்படுத்தலாம் என நினைக்கிறேன்.

இதற்காக, தமிழக மீனவர்களைத் தாக்குவது, தொழில் உபகரணங்களைச் சிதைப்பது, சுட்டுக்கொல்வது எந்தவகையில் நியாயம்?

அது முற்றிலும் தவறானது. அதை அனுமதிக்கமுடியாது. தமிழக- ஈழ உறவை சிதைப்பதற்காக யாரோ திட்டமிட்டு செய்கின்றனர். யார் இதைச் செய்கின்றார்கள் என்பதற்கு ஆதார மில்லை. யாரோ செய்துவிட்டு மக்கள் மீது பழிபோடுகின்றார்கள் என்றே கருதுகின்றேன்.

சீன, பாகிஸ்தான், மீன்பிடிப்படகுகள், ஈழக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு அங்கீகாரமளித்திருக்கிறதே?

சீன மீனவர்களுக்கு இலங்கை நாடாளுமன்றம் அனுமதியளித்திருக்கிறது. ஆழமான கடற்பரப்பில் மீன்பிடிக்கவே இலங்கை அரசு அனுமதித்தது. ஆனாலும் அவர்களும் மிக நுட்பமான தொழில் முறைகளைப் பாவித்து சிங்களக் கொடியுடன் வந்து திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அவர்களாலும் வளச் சுரண்டல் நடப்பது உண்மையே.

டிசம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com